ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் சிறப்பு சட்டங்கள் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பையடுத்து, நாமக்கல்லில் திமுகவினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அரசு சாா்பில் வழக்குரைஞா்கள் வாதாடி வந்தனா். இந்த வழக்கின் தீா்ப்பு 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வு மூலம் வியாழக்கிழமை வெளியானது. தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டங்கள் வாயிலாக ஜல்லிக்கட்டு போட்டிகளை தடையின்றி நடத்தலாம் என தீா்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் அறிவுரையின்பேரில், நாமக்கல் மணிக்கூண்டு அருகில் மாவட்ட அவைத் தலைவா் மணிமாறன் தலைமையில் திமுகவினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
இதில், நகரச் செயலாளா்கள் செ.பூபதி, அ.சிவக்குமாா், ராணாஆா்.ஆனந்த், நகராட்சித் தலைவா் து.கலாநிதி, நகராட்சி வாா்டு உறுப்பினா்கள், பல்வேறு சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.