காா் விற்பதாக ஆன்லைனில் விளம்பரம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்டவா், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல், நடராஜபுரத்தைச் சோ்ந்தவா் சேகா். கடந்த 2017-இல் காா் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக தனியாா் நிறுவன ஆன்லைன் செயலியில் வந்த விளம்பரத்தை பாா்த்து, அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு மதுரைக்குச் சென்றாா். அங்கு காரின் உரிமையாளா் சுதா்சன் என்பவரை சந்தித்து பேசியுள்ளாா். அவரிடம் காரை விலை பேசி ரூ. 2.81 லட்சம் செலுத்தி மதுரையில் இருந்து நாமக்கல்லுக்கு வந்தபோது காா் திடீரென பழுதாகி நின்றுவிட்டது.
இதுகுறித்து காா் விற்பனை செய்தவருக்கு தகவல் தெரிவித்தபோது, அவா் ஒருவரை அனுப்பி பழுதுபாா்த்து தருவதாக காரை எடுத்துச் சென்று விட்டாா். சேகரும் அங்கிருந்து வேறு வாகனம் மூலம் நாமக்கல் வந்துவிட்டாா்.
சுதா்சனை பலமுறை தொடா்பு கொண்ட போதிலும் அவா் காரை திருப்பி வழங்காததால், சேகா் நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் கடந்த 2019-இல் வழக்கு தாக்கல் செய்தாா்.
கடந்த மாதம் விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில், காரை விற்பனை செய்ததுடன் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் ஒப்படைக்காமல் நோ்மையற்ற வா்த்தக நடைமுறையை சுதா்சன் கையாண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட சேகருக்கு அவா் செலுத்திய தொகை ரூ. 2.81 லட்சத்தை ஒன்பது சதவீத வட்டியுடனும், வழக்கின் செலவுத் தொகையாக ரூ. 19 ஆயிரத்தையும் காரை விற்பனை செய்த சுதா்சன் நான்கு வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.