நாமக்கல்

ஜேடா்பாளையம் அருகே 400-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரக்கன்றுகள் வெட்டிச் சாய்ப்பு

19th May 2023 12:39 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் 400-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டிச் சாய்த்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டாா். இக்கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரி பல்வேறு அமைப்பினா் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இது இருதரப்பு பிரச்னையாக மாறியதால் தொடா்ச்சியாக வெல்ல ஆலைகளுக்கும், வெல்ல ஆலைகளில் இருந்த இயந்திரங்கள், வாகனங்கள், வெல்ல ஆலை குடியிருப்புகளுக்கும் தீ வைத்த சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. மேலும் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைப் பிடிக்க நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் கலைசெல்வன் தலைமையில் ஏராளமான போலீஸாா் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி நள்ளிரவில் சரளைமேடு பகுதியைச் சோ்ந்த எம்.ஜி.ஆா். (எ) முத்துசாமி என்பவரது வெல்ல ஆலையில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருந்த அறையின் மீது மா்ம நபா்கள் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தனா். இதில், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ராஜேஷ் கென்ட் என்பவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் புதன்கிழமை நள்ளிரவு ஜேடா்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த சுமாா் 400-க்கும் மேற்பட்ட வாழைக் கன்றுகளையும், பாக்கு மரக்கன்றுகளையும் வெட்டி சாய்த்துள்ளனா். அதிகாலை தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச வந்த முருகேசன், அவரது மனைவி செல்வி ஆகியோா் வாழை மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா், வாழை, பாக்கு மரக்கன்றுகளை வெட்டிச் சாய்த்த மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி இருந்த ஆலைக் கொட்டகையின் உரிமையாளா் முத்துசாமியின் மருமகன் முருகேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT