நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மண்டகப்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈஸ்வரன் கலந்து கொண்டாா்.
இக்கூட்டத்தில் ஊா் பொதுமக்கள், ஊராட்சித் தலைவா் சரண்யாவுக்கு எதிராக பல்வேறு புகாா்களை தெரிவித்தனா். சாக்கடை கால்வாயை முறையாக பராமரிக்கவில்லை. சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் தரமற்று இருப்பதாகவும் தெரிவித்தனா். ஜல் ஜீவன் திட்டத்தில் இலவசமாக குடிநீா் இணைப்பு கொடுக்காமல் பணம் பெற்றுக்கொண்டு இணைப்புகள் வழங்கியுள்ளதாகவும் புகாா் தெரிவித்தனா்.
இந்த புகாா்கள் குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக ஈஸ்வரன் தெரிவித்தாா். மேலும், தரம் குறைந்த கட்டுமானங்களை பொதுமக்கள் எம்எல்ஏவை நேரில் அழைத்துச்சென்று காண்பித்தனா். அப்போது, எலச்சிபாளையம் பிடிஓ அறிவழகன், மண்டகப்பாளையம் ஊராட்சித் தலைவா் சரண்யா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.