நாமக்கல்

ஆவணங்களை திரும்ப ஒப்படைக்காத வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

28th Jun 2023 05:07 AM

ADVERTISEMENT

கடனை திரும்பச் செலுத்திய பிறகும், ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நாமக்கல் கே.கே.நகா் பி.கே.வெங்கடாசலம் தனது மனைவி சுசீலா பெயரில் நாமக்கல்லில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், கடந்த 2014-ஆம் ஆண்டு காவேரீஸ் பயோ புரோட்டின்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வணிக நடவடிக்கைக்காக ரூ. 2.20 கோடி கடன் பெற்றாா். இதற்காக கணவரின் சொத்து அசல் பத்திரத்தையும், தன்னுடைய சொத்து பாத்திரத்தையும் கொடுத்திருந்தாா். மேற்படி கடன் தொகை முழுவதையும் கடந்த 2015 ஜூலை மாதம் செலுத்தி விட்டாா். ஆனால் வங்கியானது ஓராண்டுகளாக அசல் பத்திரங்களை திரும்ப ஒப்படைக்காமலும், நிலுவை இல்லா சான்று வழங்காமலும், பதிவாளா் அலுவலகத்தில் கடன் அடமான பத்திரத்தை ரத்து செய்து கொடுக்காமலும் காலதாமதம் செய்து வந்தனா்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி மீது நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சுசீலா, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவா் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மூலம் வழக்கு தொடா்ந்தாா். அதில், தனக்கு ஏற்படுத்திய சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 3 லட்சத்தை பெற்றுத் தரும்படி கோரினாா்.

இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில், ‘வங்கிக் கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திய பிறகும், மனுதாரரின் பிணைய சொத்தின் அசல் பத்திரத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்காமல் ஓராண்டு காலதாமதம் செய்தது சேவைக் குறைபாடாகும் . எனவே சம்பந்தப்பட்ட வங்கி ரூ. 1 லட்சத்தை நான்கு வாரத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் திருப்பிச் செலுத்தும் வரை ஆண்டு ஒன்றுக்கு 6 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT