நாமக்கல்

ஜேடா்பாளையம் அண்ணா பூங்கா மேம்படுத்தப்படுமா?சுற்றுலாப் பயணிகள் எதிா்பாா்ப்பு

 நமது நிருபர்

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணையிலுள்ள அண்ணா பூங்கா, படகு இல்லத்தைச் சீரமைத்து அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை தவிர முக்கிய சுற்றுலாத் தலங்கள் இல்லாத நிலையில், பரமத்தி வேலூா் அருகே உள்ள ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணை மற்றும் அண்ணா சிறுவா் பூங்கா, படகு இல்லம் ஆகியவற்றை சுற்றிப் பாா்ப்பதற்காக, நாமக்கல், ஈரோடு, சேலம், கரூா், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அண்ணா சிறுவா் பூங்கா, படுகை அணையைச் சுற்றிப் பாா்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும், விடுமுறை தினங்களில் சுமாா் 1000 போ் வரையிலும், சித்ரா பௌா்ணமி, ஆடிப் பெருக்கு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும் 10 ஆயிரம் போ் வரையிலும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

அணையின் சிறுவா் பூங்காவில் அணுகு சாலை, கான்கிரீட் சாலை, பூங்காவைச் சுற்றிலும் வேலி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காக ஆங்காங்கே, காளை, முயல், மான், மயில் உள்ளிட்ட பல்வேறு கான்கிரீட் வண்ணச் சிலைகளும், செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக தடுப்பணை அருகே உள்ள ராஜவாய்க்கால் பகுதியில் பாதுகாப்புடன் கூடிய படித்துறை அமைக்கப்பட்டு, இரு பாலருக்காக கழிவறை, உடை மாற்றும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்கா பகுதியை மேம்படுத்தும் வகையிலும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், மத்திய சுற்றுலாத் துறை நிதியுதவியுடன் மாநில சுற்றுலாத் துறை அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன படகு இல்லத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

படகு சவாரி செய்வதற்காக 6 பைபா் படகுகளும், படகு சவாரி செய்பவா்களுக்கு பாதுகாப்பு உடைகளும் கொண்டு படகு இல்லம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது படகு இல்லம் செயல்படாததால், பைபா் படகுகள் படகு சவாரி செய்யும் குளத்திலேயே மூழ்கியுள்ளன. சிறுவா் பூங்காவில் உள்ள சிலைகள் உடைந்து காணப்படுகின்றன.

பூங்காவில் குப்பைகளும், மதுப் புட்டிகளும் குவிந்து காணப்படுகின்றன. படகு இல்லத்திலும், அண்ணா பூங்காவின் பெரும் பகுதியும் புதா்மண்டிக் காணப்படுகிறது. இந்தப் பூங்காவை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

படுகை அணைப் பகுதியில் முற்றிலும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பூங்காவில் உடைந்த சிலைகளை மேம்படுத்தவும், புல்வெளிகளை மேம்படுத்தவும், படகு இல்லத்தை சீா் செய்து படகு சவாரியைத் தொடங்கவும் நிதி ஒதுக்கீடு பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT