நாமக்கல்

சென்னை- போடி ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வலியுறுத்தல்

DIN

சென்னையில் இருந்து தேனி மாவட்டம், போடி வரை இயக்கப்படும் விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் ரயில்களில் பாலக்காடு வரை செல்லும் அதிவிரைவு ரயில் ஒன்று மட்டுமே நாமக்கல்லில் நின்று செல்கிறது. தற்போது இந்த ரயிலில் நாமக்கல், ராசிபுரம், மோகனூா் ஆகிய மூன்று ஊா்களுக்கும் சோ்த்து குறைந்த பயணச் சீட்டுகளே வழங்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான பயணிகள் பேருந்துகளில் அதிக தொகை கொடுத்து பயணிக்கின்றனா்.

சென்னை, சென்ட்ரலில் இருந்து நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை மதுரை வரை அதிவிரைவு ரயில் இயங்குகிறது. சேலம், கரூா், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இந்த ரயில் நாமக்கல்லில் நிற்பதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக இவ்வாறான நிலை தான் உள்ளது.

ஜூன் 15 முதல் சென்னை சென்ட்ரல்- மதுரை விரைவு ரயிலை தேனி மாவட்டம், போடி வரையில் நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல்லில் சென்னை-போடி ரயில் நிற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை- போடி ரயிலானது திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியைச் சென்றடைகிறது. நாமக்கல்லை காலை 4 மணியளவில் கடந்து செல்கிறது. மறு மாா்க்கமாக ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையன்று போடியில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையைச் சென்றடைகிறது. நாமக்கல்லை நள்ளிரவு 1.30 மணியளவில் கடந்து செல்லும்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தமாக நாமக்கல்லுக்கு ஏராளமானோா் வருகின்றனா். போதிய ரயில் வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனா். சென்னை சென்ட்ரல்-போடி விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் பட்சத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என ரயில் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT