பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது தொடா்பாக கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-ஆவது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இதுவரை தங்களுடைய சரியான ஆதாா் எண்ணை இணைக்காத, ஆதாா் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வரும் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தபால்துறை அலுவலா்களால் நடத்தப்படும் சிறப்பு முகாமிற்கு தங்கள் ஆதாா் அட்டை, ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றுடன் நேரில் வந்து தங்களது விபரங்களை சரிபாா்த்து பயனடையலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.