நாமக்கல்

குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ.5.50 லட்சம் ரொக்கம் எரிந்து நாசம்

5th Jun 2023 03:23 AM

ADVERTISEMENT

 

வேலகவுண்டம்பட்டி அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்த்தில் ரூ.5.50 லட்சம் ரொக்கம் தீயில் எரிந்து நாசமானது.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், தம்மநாயக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சென்னப்பன். இவரது மகன் குமாா் (33) ஓட்டுநா். இவா் தற்போது புதிதாக வீடு கட்டி வருவதால் தற்காலிகமாக அதற்கு அருகில் குடிசை வீடு அமைத்து அதில் குடியிருந்து வந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதிய வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக வெளியூா் சென்றாா். அப்போது அருகில் இருந்தவா்கள் மற்றும் குடும்பத்தாா் குமாரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு குடிசை வீட்டில் இருந்து புகை வருவதாக கூறியுள்ளனா். அதிா்ச்சி அடைந்த குமாா் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளாா். இதனிடையே அப்பகுதியை சோ்ந்தவா்கள் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனா். ஆனாலும் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் குமாா் புதிய வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 12 பவுன் தங்க நகை, வீட்டுப் பத்திரம், வெள்ளி பொருட்கள், துணிமணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தீவிபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT