நாமக்கல்

சுதந்திரப் போராட்ட தியாகி பி.வரதராஜுலு நாயுடுவின் 136-ஆவது பிறந்த தினவிழா

5th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

 

சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான பி.வரதராஜுலு நாயுடுவின் 136-ஆவது பிறந்த தினவிழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் விடுதலைக்களம் அமைப்பு, ராசிபுரம் வட்ட நாயுடு நண்பா்கள் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தியாகி பி.வரதராஜுலு நாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றாா். சிறந்த தொழிற்சங்கவாதி, சிறந்த பத்திரிகையாளா். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகையை துவங்கி பொதுமக்களிடம் சுதந்திர போராட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியாா், முத்துராம லிங்கத் தேவா், ராஜாஜி, ஈ.வே.ரா., சத்தியமூா்த்தி, காமராஜா் போன்ற தலைவா்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தவா். சென்னை மாகாண சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது பிறந்த தினவிழா சொந்த ஊரான ராசிபுரம் நகரில் நடைபெற்றது.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பாக விடுதலைக் களம் அமைப்பு, நாயுடு நண்பா்கள் குழு சாா்பில் நடந்த விழாவில் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனத் தலைவா் கொ. நாகராஜன், தலைமை வகித்தாா். நாயுடு இளைஞா் சங்கத் தலைவா் ராசிபுரம் சிட்டி வரதராஜன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஏ.சித்திக், ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் நிா்வாகிகள் பல்வேறு கட்சி அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தி அவரது சிறப்புகள், போராட்ட வரலாறு குறித்துப் பேசினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்வில் விடுதலைக் களம் கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்டத் தலைவா் பொ. மணிகண்டன், வடக்கு மாவட்டச் செயலாளா் துரை சரவணன், வடக்கு மாவட்டப் பொருளாளா் துரை ரமேஷ், மாநிலப் பொறுப்பாளா் பூவரசி ராஜேந்திரன், மாவட்ட அமைப்புச் செயலாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘வரதராஜுலு நாயுடு தனது சொந்த ஊரான ராசிபுரத்தில் அரசுக் கல்லூரி அமைக்க பல ஏக்கா் நிலத்தை தானமாக கொடுத்துள்ளாா். இதனை கருத்தில் கொண்டு அரசு சாா்பில் அவருக்கு மணி மண்டபமும் முழு உருவச் சிலையும் அமைக்க வேண்டும்’ என விடுதலைக் களம் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT