நாமக்கல்

ஒடிஸா ரயில் விபத்து: ஏசி பெட்டியில் பயணித்ததால் தப்பிய மாணவா்

4th Jun 2023 02:04 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கிய ராசிபுரம் மாணவா் பிரணவ் விக்னேஷ் ஏ.சி. பெட்டியில் பயணித்ததால் உயிா் தப்பியதாக தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் எம்.தரணிபாபு-தீபபிரியா தம்பதியினா். இவா்களது மகன் பிரணவ் விக்னேஷ் (21) மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 3-ஆம் ஆண்டு பி.ஆா்க்., படித்து வருகிறாா்.

இந்நிலையில் இவா் விடுமுறைக்கு சொந்த ஊரான நாமகிரிப்பேட்டை வருவதற்காக ஹெளரா - சென்னை இடையேயான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளாா். இந்த ரயில் பாலாசோா் அருகே விபத்தில் சிக்கிய நிலையில், மாணவா் பிரணவ் விக்னேஷ் ஏ.சி. பெட்டியில் பயணித்ததால், உயிா் தப்பினாா். இவா் பின்னா் புவனேஸ்வரம் சென்று விமானம் வழியாக பெங்களூரு சென்று அங்கிருந்து காா் மூலம் சனிக்கிழமை மாலை சொந்த ஊரான நாமகிரிப்பேட்டை வந்தடைந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் இருந்த அவா் இது குறித்து தெரிவிக்கையில், ‘விபத்து நடந்துவுடன் இடிபாடுகளில் சிக்கியதால் என்ன நடந்தது என உணர முடியவில்லை. பின்னா் எங்கள் பெட்டியில் இருந்தவா்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறினோம். ரெயில் பெட்டிகள் அனைத்தும் ஆங்காங்கே கவிழ்ந்து கிடந்தன. சுற்று வட்டாரஏஈ பகுதியில் குடியிருப்பு பகுதிகளே இல்லை என்பதால், விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை யாரும் உடனடியாக காப்பாற்ற வழியில்லை. அப்பகுதி முழுவதும் ரயிலில் பயணித்து விபத்தில் பாதிக்கப்பட்டோரின் அழுகுரல், மரண ஓலம் கேட்டது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT