நாமக்கல்

ராசிபுரம் பகுதிகளில் 284 பள்ளி வாகனங்கள் ஆய்வு

4th Jun 2023 02:06 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் பகுதியில் தனியாா் பள்ளி வாகனங்களின் தகுதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 16 வாகனங்கள் தகுதி ரத்து செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு முன் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதைத் தொடா்ந்து போக்குவரத்துத் துறை ஆணையா் , மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் பள்ளிகள் திறப்பதற்கு முன் ராசிபுரம் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தல் நிகழ்ச்சி ராசிபுரம் எஸ். ஆா்.வி.ஆண்கள் பள்ளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த வாகன ஆய்வில் துணை போக்குவரத்து ஆணையா் பி.சுரேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாமக்கல் வடக்கு இ.எஸ். முருகேசன், கோட்டாட்சியா் சரவணன், மாவட்ட தனியாா் பள்ளிக் கல்வி அலுவலா் கணேசன், ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் து.நித்யா ஆகியோா் 33 பள்ளிகளில் இருந்து 284 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். பள்ளி வாகனங்களில் பிரேக், கேமராக்கள், அவசரக்கால வெளியேற்ற வழி, தீயணைப்புக் கருவிகள் இயங்கும் வகைகள் என 19 வகையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் 16 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.

மேலும் தீயணைப்புத் துறையினா் மூலம் தீயணைப்பான் கருவி பயன்படுத்தும் முறை பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. போக்குவரத்து துறையின் சாா்பாக பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு, வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது, பராமரிப்பு போன்றவை குறித்தும் ஒட்டுநா்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT