நாமக்கல்

மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீண்டும் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்

2nd Jun 2023 12:18 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மீண்டும் அங்கீகாரத்தை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோா் தெரிவித்தனா்.

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில், மக்கள் தொடா்பு பேரியக்கம்-2023 நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பாஜக மாநில துணைத் தலைவா்களான கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோா் வியாழக்கிழமை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை நேரில் ஆய்வு செய்தனா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான வசதிகள் குறித்தும், கூடுதல் படிப்புகள் உள்ளிட்டவை பற்றியும் கல்லூரி முதல்வா் கே.சாந்தா அருள்மொழியிடம் கேட்டறிந்தோம். புதிதாக 12 துணை மருத்துவப் படிப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்தாா். மாநில அரசிடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்ததும் புதிய மருத்துவப் படிப்புகள் தொடங்கப்படும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்கி உள்ளது. நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி இருந்தபோதும், மருத்துவமனை இன்னும் தயாராகவில்லை. குடிநீா் பிரச்னை உள்ளதாகவும், 16 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதித்து காவிரி குடிநீா் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 3 முதல் 5 மாதங்களில் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்றும் கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் திருச்சி, தருமபுரி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய இளநிலை மருத்துவக் கல்வி ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். மாநில அரசும் அதற்கேற்ப தங்களுடைய செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கும், அங்கீகாரம் ரத்தானதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மூன்று கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீண்டும் பெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றனா்.

இந்த ஆய்வின் போது, மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT