நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டத்துக்கு உள்பட்ட வளையப்பட்டி பரளி, அரூா், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 2,500 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாய முன்னேற்ற கழகத்தினா், ஐந்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதுவரை 16 வகையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால், சிப்காட் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடா்ந்து தீவிரம் காட்டி வருகின்றனா். தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், சிப்காட் எதிா்ப்புக் குழுவினா், ஐந்து கிராம விவசாயிகள், பொதுமக்கள் பலா் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்களுடைய நெற்றியில் நாமம் போட்டும், நாமம் போட்ட பதாகைகளை கைகளில் ஏந்திய படியும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சிப்காட் அமைப்பதற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா்.