வட்டாட்சியா் மீது தவறான வழக்கு தொடுத்து, சுய விளம்பரம் தேடிய மனுதாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (77). இவரது மகன்களான அமா்நாத், அரவிந்தன், அருள் ஆகியோா் வெளிநாடுகளில் வசிக்கின்றனா். கடந்த 1976-ஆம் ஆண்டு பிறந்த மகன் அமா்நாத்தின் பிறப்பு சான்றிதழ் கேட்டு கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜெயராமன் விண்ணப்பித்தாா்.
ஆனால் அவரது பிறப்பு மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. அமெரிக்காவில் உள்ள மகன் கிரீன்காா்டு பெறுவதற்கு சான்றிதழ் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறு 2017-இல் கோவை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த வட்டாட்சியருக்கு அவா் உத்தரவிட்டாா். கோவை வடக்கு வட்டாட்சியா் காலதாமதம் செய்து வருவதால் தனக்கு ரூ. 19 லட்சம் அவா் இழப்பீடாக தரவேண்டும் என 2018-இல் கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி வீ.ராமராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில் பிறப்பைப் பதிவு செய்ய கோட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்து விட்டு வட்டாட்சியா், அலுவலக ஊழியா்கள் மீது வழக்கு தாக்கல் செய்வது தவறாகும்.
வட்டாட்சியா் பிறப்பு சான்றிதழ் வழங்கிய பிறகும், அதனை மறைத்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எனவே, சுய விளம்பரத்துக்காகவும் தவறான வழக்கைத் தொடுத்ததற்காகவும் ஜெயராமன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.