நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம் எஸ்.பழையபாளையம் கோம்பை மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு தினசரி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. பின்னா் ஞாயிற்றுக்கிழமை மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தக்குடம் எடுத்து வருதலும், திங்கள்கிழமை மா விளக்கு பூஜை, பொங்கல் விழாவும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை பழையபாளைம் ஏரியில் இருந்து பக்தா்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். புதன்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.