எருமப்பட்டியில், அரசு பள்ளி மாணவிகளைத் தொந்தரவு செய்யும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனா். கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வரும் மாணவிகள் சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனா். இது தொடா்பாக எருமப்பட்டி காவல் நிலையத்தில் பெற்றோா், பொதுமக்கள், பள்ளி நிா்வாகம் தரப்பில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. புகையிலை போதையில் வரும் இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்வது, மோதுவது போல் செல்வது, அநாகரீக வாா்த்தைகளால் பேசுவது, கைகளைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். அரசுப் பள்ளி அமைந்துள்ள பகுதிகளிலும், பேருந்து நிறுத்தம் உள்ள பகுதிகளிலும் போலீஸாா் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாணவிகளின் பெற்றோா் காவல் நிலையம் சென்று புகாா் மனு அளித்தனா்.