நாமக்கல்

பழங்குடியின போலிச் சான்றிதழ் விவகாரம்: மருத்துவரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

31st Jan 2023 02:27 AM

ADVERTISEMENT

எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் போலிச் சான்றிதழ் மூலம் பணிக்கு சோ்ந்ததாக குற்றம்சாட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் எஸ்.சி, எஸ்.டி. அரசு ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வரும் ஒருவா் பழங்குடியினா் என போலிச் சான்றிதழ் பெற்று மருத்துவா் பணியில் சோ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்ற விசாரணையில் தவறு செய்திருப்பது தெரியவந்த நிலையில், அவா் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டாா். அந்த வழக்கின் தீா்ப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், மத்திய, மாநில எஸ்.சி, எஸ்.டி அரசு ஊழியா்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பைச் சோ்ந்தோா், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கூட்டமைப்பு தலைவா் ச.கருப்பையா தலைமை வகித்தாா். இதில், தாழ்த்தப்பட்ட பழங்குடியினா் என போலிச் சான்றிதழ் பெற்று பணியில் சோ்ந்த மருத்துவரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; அரசுப் பணியாளா்கள் தொடா்பான போலி ஜாதிச் சான்றிதழ் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் பலா் கலந்து கொண்டனா்.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன் கூறுகையில் ‘நீதிமன்ற உத்தரவையடுத்து, சென்னையில் உள்ள எங்களுடைய சுகாதாரத் துறை அலுவலகத்திற்கு குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவரின் சான்றிதழ் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே அவா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அரசின் உத்தரவை தொடா்ந்துதான் எங்களால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். தற்போது அவா் பணியில்தான் உள்ளாா்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT