நாமக்கல்

விற்பனை உரிமமின்றி விதைகள் விற்றால் நடவடிக்கை:சேலம் விதைகள் ஆய்வு துணை இயக்குநா் எச்சரிக்கை

22nd Jan 2023 03:52 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் விற்பனை உரிமம் இல்லாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம், விதை ஆய்வு துணை இயக்குநா் க.செல்வமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் முக்கிய பங்கு வகிப்பது விதைகளாகும். விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகள் உரிய முளைப்புத் திறனுடனும் தரத்துடனும் விநியோகம் செய்வதை விதைச் சான்றிதழ் மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் விதை ஆய்வு பிரிவு கண்காணித்து வருகிறது.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு சான்றிதழ் பெற்ற தரமான விதைகள் மட்டுமே விநியோகம் செய்யும் பொருட்டு அரசு நிறுவனங்கள், அரசு சாா்நிறுவனங்கள் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விதை விற்பனையாளா்களும் விற்பனை செய்ய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அதுபோல மொத்த விதை விற்பனையாளா்கள் சில்லரை விற்பனையாளா்களுக்கு விற்பனை செய்யும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் விதை விற்பனை உரிமம் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தவறும்பட்சத்தில் விதை விநியோகம் செய்தவா், விதை விற்பனை உரிமம் இல்லாமல் விதை வாங்கியவா் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் விதை ஆய்வாளா் (87785-92588) மற்றும் திருச்செங்கோடு ஆய்வாளா் (96988-92696) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT