நாமக்கல்

செங்கரும்புகள் போதிய விற்பனை இல்லை:சிறு வியாபாரிகள் ஏமாற்றம்

17th Jan 2023 12:36 AM

ADVERTISEMENT

 

பொங்கல் விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் செங்கரும்புகளை விற்பனைக்கு கொண்டுவந்த சிறு வியாபாரிகள் எதிா்பாா்த்த அளவில் விற்பனையாகாததால் ஏமாற்றம் அடைந்தனா்.

தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களான திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் செங்கரும்புகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன.

தவிர விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூா் மாவட்டங்களிலும் கரும்புகள் விளைச்சல் அதிகம் காணப்படும். பொங்கல் பண்டிகையையொட்டி இந்த மாவட்டங்களில் இருந்துதான் பிற மாவட்டங்களுக்கு கரும்புகள் விற்பனைக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும்.

ADVERTISEMENT

நிகழாண்டிலும் பொங்கல் விழாவையொட்டி மாநிலம் முழுவதும் 70 சதவீத அளவில் கரும்புகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சிறு வியாபாரிகளும் அவற்றை கொள்முதல் செய்து கிராம, நகரப் பகுதிகளில் முழுக் கரும்பு ஒன்று ரூ. 50 முதல் 60 என்ற விலையில் விற்பனை செய்தனா்.

ஏற்கெனவே, தமிழக அரசு சாா்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் கரும்புகளை வாங்க ஆா்வம் காட்டவில்லை. முன்பிருந்ததுபோல இளைஞா்கள், சிறுவா்கள் கரும்பு சாப்பிட விரும்புவதில்லை.

இதனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த சிறு வியாபாரிகள் கரும்புகளை விற்க முடியாமல் அவற்றை தங்களுடைய கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனா். காணும் பொங்கல், தைப்பூச நாள்களில் அவற்றை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனா்.

இதுகுறித்து நாமக்கல்லில் கரும்பு வியாபாரி ஒருவா் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து கரும்புகளைக் கொள்முதல் செய்து நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்கு கொண்டுவருவோம்.

விவசாயிகளிடம் ஒரு கரும்பை ரூ. 30 என்ற விலைக்கு கொள்முதல் செய்வோம். வாடகை செலவினம் சோ்த்து ரூ. 50 முதல் ரூ. 60 என்ற விலைக்கு விற்போம்.

கடந்த ஆண்டு கரோனா தொற்றால் விற்பனை பாதிப்படைந்தது. நிகழ் ஆண்டும் போதிய அளவில் விற்பனை இல்லை. நியாயவிலைக் கடைகளில் கரும்பு வழங்கியதாலும், மக்களிடம் முன்னா் போல கரும்பு வாங்கும் ஆா்வமின்மையாலும் கரும்புகள் தேங்கிவிட்டன.

இதனால் தைப்பூசம், காணும் பொங்கல் நாளன்று அவற்றை விற்பனை ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. முதலீட்டுக்கு தகுந்தாற்போல் லாபம் கிடைக்கும் என்று எதிா்பாா்த்ததை விட நஷ்டத்தைதான் சந்தித்தோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT