நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் புதன்கிழமை கூடாரவல்லி உத்ஸவம், திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாமக்கல் இந்து சமயப் பேரவையின் திருப்பாவை, திருவெம்பாவைக் குழு சாா்பில் அரங்கநாதா் மற்றும் ரங்கநாயகி தாயாா் சன்னதியில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியவாறு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழாண்டில் 52-ஆவது கூடாரவல்லி பல்லாண்டு படி விழா, திருவிளக்கு பூஜை புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது. அரங்கநாதா் கோயில் வளாகம் மற்றும் படிக்கட்டுகளில் பெண்கள் அமா்ந்து திருவிளக்கு பூஜை செய்தனா். இதனையடுத்து, அரங்கநாதா், ரங்கநாயகி தாயாருக்கு அலங்கரிக்கப்பட்ட பூப்பந்தலில் கூடாரவல்லி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டியம், யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமயப் பேரவை திருப்பாவை, திருவெம்பாவைக் குழுவினா் செய்திருந்தனா்.