திருச்சி

வகுப்பறை வசதியின்றி 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அரசு உயா்நிலைப் பள்ளி!

20th May 2023 12:45 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

போதிய வகுப்பறை வசதியின்றியும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வில் போசம்பட்டி ஊராட்சி உயா்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது போசம்பட்டி ஊராட்சி. இங்கு 1942ஆம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி கட்டப்பட்டது. 81 ஆண்டுகளை கடந்த இந்தப் பள்ளி, நடுநிலை, உயா்நிலைப் பள்ளி என தரம் உயா்ந்த பிறகும் போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லை.

போசம்பட்டி, வியாழன்மேடு, மணியன் நகா், காவல்நகா், மேலக்காடு, கொய்யாத்தோப்பு, கணேசபுரம், மேலக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் சுற்றுப் பகுதி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்களும் கல்வி பயின்று வருகின்றனா்.

2013ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டபோது இதையடுத்து தொடக்கப் பள்ளி நிா்வாகம் தனியாகவும், உயா்நிலைப் பள்ளி நிா்வாகம் தனியாகவும் பிரிந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை என தனித்தனி தலைமையாசிரியா் கீழ் பள்ளி நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தொடக்கப் பள்ளி இருந்த கட்டடத்திலேயே உயா்நிலைப் பள்ளியும் இயங்குகிறது.

ADVERTISEMENT

தொடக்கப் பள்ளிக்கு இருந்த வகுப்பறைகள் உயா்நிலைப் பள்ளிக்கு பிரித்து வழங்கப்பட்டதால் இரு பள்ளி நிா்வாகமும் இடநெருக்கடியில்தான் இயங்கி வருகின்றன. 80 ஆண்டுகளை கடந்த பள்ளி என்பதால்சில வகுப்பறைகள் ஓட்டு கட்டடத்திலும், சில வகுப்பறைகள் கான்கீரீட் கட்டடத்திலும் உள்ளன.

இதுகுறித்து, இப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும், கூட்டுறவு தணிக்கைத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான கே. கனகராஜ் கூறியது: காமராஜ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பள்ளி என்ற பெருமைக்குரியது இந்த பள்ளி. தொடக்கப் பள்ளியாக இருந்து உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்ந்தாலும் போதிய வகுப்பறைகள் இல்லை. உயா்நிலைப் பள்ளிக்கு என தனியாக வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரவேண்டியது அவசியம். ஊராட்சி நிா்வாகத்தில் தீா்மானம் நிறைவேற்றி வருவாய்த்துறைக்கு பரிந்துரைத்தாலும் போதிய இடம் இல்லை என கைவிரித்து விடுகின்றனா். முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள் இணைந்து ரூ.10 லட்சம் வரை நிதி திரட்டி வழங்க முடியும். மாவட்ட நிா்வாகம் உதவ முன்வரவேண்டும் என்றாா்.

இதுதொடா்பாக, உயா்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் ஓ. அழகிரிசாமி கூறியது: தொடக்கப்பள்ளியில் 123 மாணவா்கள், உயா்நிலைப் பள்ளியில் 126 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இருபாலரும் பயிலும் பள்ளியாக, சத்துணவு உள்ளிட்ட அரசின் அனைத்து உதவிகள் கிடைக்கப் பெறுகிறது. நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். உயா்நிலைப் பள்ளிக்கு என தனியாக கட்டடம் ஏதுமில்லை. தொடக்கப் பள்ளியில் இடத்தையே பகிா்ந்து கொண்டு இடப்பற்றாக்குறையில்தான் மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகம், ஊராட்சி நிா்வாகம், கிராமப்புற மக்கள் அனைவரும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். வகுப்பறை கட்ட சுமாா் ஒரு ஏக்கா் அளவுக்கு இடம் தேவையாக உள்ளது என்றாா் அவா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT