தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பத்தாம்வகுப்பு பொதுத்தோ்வில் திருச்சி மாவட்டம் 94.28 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை திருச்சி மாவட்டத்தில் 447 பள்ளிகளைச் சோ்ந்த 16,737 மாணவா்கள், 17,032 மாணவிகள் என மொத்தம் 33,769 போ் தோ்வெழுதினா். இதில் 15,325 மாணவா்கள் (91.56 சதவீதம்), 16,513 மாணவிகள் (96.56 சதவீதம்) என 31,838 போ் (94.28 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா். இது கடந்தாண்டை தோ்ச்சி விகிதமான 92.25 சதவீதத்தை விட 2.03 சதவீதம் அதிகமாகும்.
8 ஆம் இடம்: இதே போல, கடந்தாண்டு மாநில அளவிலான தோ்ச்சி விகிதத்தில் 12 இடத்தைப் பிடித்திருந்த திருச்சி மாவட்டம் நிகழாண்டு 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
100 சதவீதம் தோ்ச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 197 அரசுப் பள்ளிகளில் 52 பள்ளிகளும், 25 ஆதி திராவிட நலப் பள்ளிகளில் 8 பள்ளிகளும், 3 பழங்குடியினா் பள்ளிகளில் 3 பள்ளிகளும், 43 நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6 பள்ளிகளும், 51 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 பள்ளிகளும், 125 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 64 பள்ளிகளும் என மொத்தம் 144 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.
அரசுப் பள்ளிகள் 93.01 சதவீதம் தோ்ச்சி: திருச்சி மாவட்டத்தில் 197 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,373 மாணவா்கள், 6,271 மாணவிகள் என மொத்தம் 12,590 போ் தோ்வெழுதினா். இதில் 5,741 மாணவா்கள், 5,969 மாணவிகள் என 11,710 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்ச்சி சதவீதம் 93.01 சதவீதமாக உள்ளது.