நாமக்கல்

ரேஷன் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாடகை லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம்:போலீஸாா் விசாரணை

DIN

நாமக்கல்லில் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கும் வாடகை லாரிகள் ஒப்பந்தப்புள்ளி எடுப்பதற்கான (டெண்டா்) விண்ணப்பம் செலுத்தும் பெட்டியை ஒருவா் தூக்கிக் கொண்டு புதன்கிழமை ஓட்டம் பிடித்ததால் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூா், பரமத்தி வேலூா் ஆகிய ஐந்து வட்டங்களுக்கு உள்பட்டு 424 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றுக்கு, 25 வாடகை லாரிகள் மூலம் நுகா்வோருக்கு வழங்குவதற்கான அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் சென்று வழங்கப்படுகின்றன. ஓராண்டுக்கு ஒருமுறை இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் 16 லாரிகளும், பரமத்திவேலூா் பகுதியில் 9 லாரிகளும் இதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2023 -2024 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் கூட்டம் நாமக்கல் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்த லாரி உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது, ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பம் செலுத்தும் பெட்டியில் நாமக்கல் பகுதிக்கான விண்ணப்பத்தை செலுத்தலாம் என பலா் காத்திருந்தனா். இதற்கிடையே மா்ம நபா் ஒருவா், கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்த ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் தனது விண்ணப்பத்தை செலுத்தி விட்டு, மற்றவா்கள் யாரையும் போடவிடாமல் தடுத்ததுடன், அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தாா். இதனைப் பாா்த்து மற்ற ஒப்பந்ததாரா்களும், அதிகாரிகளும் அதிா்ச்சியடைந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் சங்கரபாண்டியன் விசாரணை மேற்கொண்டாா். திமுக, பாஜகவினா் இடையே எழுந்த போட்டியால் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான பெட்டி தூக்கிச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறுகையில், ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பப் பெட்டியை தூக்கிச் சென்றவா்கள் யாரென்று தெரியவில்லை. நாமக்கல் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையால் ஒப்பந்தப்புள்ளி எடுப்பதற்கான கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25 வாடகை லாரிகளுக்கான ஒப்பந்த தொகை ஆண்டுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வாரத்தில் குறைந்தபட்சம் 25 நாள்கள் லாரிகள் இயக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை வாடகை லாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT