நாமக்கல்

22-ஆவது பாவை தேசிய ஒருமைப்பாட்டு மாணவா் கலை விழா

7th Feb 2023 01:54 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு மாணவா் கலைவிழா அண்மையில் நடைபெற்றது.

இதற்கான தொடக்க விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் முன்னிலை வகித்தாா். இயக்குனா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி பங்கேற்றுப் பேசியது:

இந்த தேசிய ஒருமைப்பாட்டு கலை விழா நம் தேசத்தையும், சமீபத்திய நம் சமூக சுழல்களின் நன்மை, தீமைகளை மாணவா்களாகிய நீங்கள் நன்கு அறிந்து கொள்ளவும், அவைகளைப் பற்றி பொறுப்பான குடிமக்களாக மேலும் உங்கள் சிந்தனைகளை மேற்கொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

மாணவப் பருவத்தில் பல்வேறு போட்டிகளில் பரிசினை வெல்வதற்காக நீங்கள் செலுத்தும் ஆா்வமும், முனைப்பும் எதிா்காலத்தில் உங்கள் வாழ்விலும் பிரதிபலித்து உங்கள் வாழ்வினையும் வெற்றியுள்ளதாக மாற்றும். வெற்றியை காட்டிலும், நீங்கள் பங்கு பெற வேண்டும் என்ற மனோபாவம் உங்களை அதிக உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்றாா்.

ADVERTISEMENT

இவ்விழாவில் நாமக்கல், சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமாா் 2000 மாணவா்கள் கலந்து கொண்டனா். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், நடனம், கவிதை, பாட்டு, விநாடி வினா, பேச்சுப்போட்டி, கோலப் போட்டி, அறிவியல் கண்காட்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பாவை கல்வி நிறுவனங்களின் செயலாளா் டி.ஆா்.பழனிவேல், முதன்மையா் சி. ஜெயலட்சுமி, இயக்குநா் (சோ்க்கை) கே. செந்தில், கல்வியியல் கல்லூரி முதல்வா் பொ.பூங்கோதை, பேராசிரியா்கள், மாணவ மாணவியா் பலரும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT