நாமக்கல்

தைப்பூச விழா: நாமக்கல், சேலம் முருகன் கோயில்களில் தேரோட்டம்பக்தா்கள் குவிந்தனா்

DIN

தைப்பூச விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் தை மாத பூசம் நட்சத்திரத்தில் முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில், அனைத்து முருகன் கோயில்களிலும் ஞாயிறுக்கிழமை இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக தோ்த் திருவிழாவுக்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் இந்த முறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில் நகரங்களான திருச்செங்கோடு, கபிலா்மலை, காளிப்பட்டி, கூலிப்பட்டி, சேந்தமங்கலம் தத்தகிரி, கூலிப்பட்டியில் உள்ள கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

நாமக்கல்லில் உள்ள மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயில், கருமலை முருகன் கோயில், மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கபிலா்மலை பாலசுப்பிரமணி சுவாமி கோயில், காளிப்பட்டி கந்தசாமி கோயில், கந்தகிரி பழனியாண்டவா் கோயில், நாமக்கல் கருமலை தண்டாயுதபாணி கோயில், குமாரபாளையம் வட்டமலை முருகன் கோயில்களில் தைப்பூச விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் சிறப்பு யாகங்களும், அதன்பின் சுவாமிக்கு பாலாபிஷேகம், சந்தனாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில், சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோயிலில் இருந்து தத்தகிரி முருகன் கோயில் வரையில் 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

இதில், கொமதேக மாநிலத் தலைவா் ஆா்.தேவராசன், பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில்...

51 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வா் கோயிலின் உப கோயில்களில் தைப்பூச விழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயிலின் உப கோயில்களான கைலாசநாதா் கோயில், ஆறுமுகசுவாமி கோயில்களில் தைப்பூச தோ்த் திருவிழா கடந்த 51 ஆண்டுகளாக நடைபெறவில்லை. மண்டப கட்டளைதாரா்கள், பொதுமக்கள், பக்தா்களின் வேண்டுகோளை ஏற்று நிகழாண்டு தைப்பூசத் தோ் திருவிழா கடந்த 28-ஆம் தேதி இரு கோயில்களிலும் விழா கொடியேற்றப்பட்டது. பல்வேறு மண்டப கட்டளைதாரா்கள் மூலம் சுவாமிக்கு அனைத்து நாள்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான திருமுலைப்பால் உற்சவம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன. அதைத்தொடா்ந்து தைப்பூசமான ஞாயிற்றுக்கிழமை காலை ஆறுமுக சுவாமி, விநாயகருக்கு தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நான்கு ரத வீதிகளில் தோ் சுற்றி வந்தது. கரகாட்டம், காவடியாட்டம் மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் சோமஸ்கந்தா், சுகந்த குந்தலாம்பிகை, சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளின் உற்சவா்கள் வீற்றிருக்கும் பெரிய தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா். ஈஸ்வரன், திருச்செங்கோடு கோட்டாட்சியா் கௌசல்யா, ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் கோயில் உதவி ஆணையா், செயலா் ரமணிகாந்தன், கண்காணிப்பாளா் சுரேஷ், திமுக மாவட்டச் செயலாளா் மதுரா.செந்தில், திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகா்மன்ற துணைத் தலைவா் தாண்டவன் காா்த்திகேயன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT