நாமக்கல்

நாமக்கல்லில் 22 புதிய பள்ளி வகுப்பறை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

2nd Feb 2023 01:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 6.85 கோடி மதிப்பீட்டில் 22 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணி நடைபெறவுள்ளது. கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கும், மாணவா் வருகையை அதிகரிப்பதற்கும், மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.

இதனை கருத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 800 கோடி மதிப்பீட்டில் 6,000 புதிய வகுப்பறைகள் நிகழாண்டில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தாா்.

அந்த அறிவிப்பின்படி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 36 மாவட்டங்களில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 22 பள்ளிகளில் ரூ. 6.85 கோடி மதிப்பில் புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பொட்டணம் ஊராட்சியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து முதல்வா் அடிக்கல் நாட்டியதற்கான பெயா் பலகையை திறந்து வைத்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சிவக்குமாா், முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் குமாா், திமுக ஒன்றிய செயலாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT