நாமக்கல்

நாமக்கல்லில் 38 புதிய வகை நீா்ப்பறவை இனங்கள்:பறவையியல் கழகம்-வனத்துறை ஆய்வில் பதிவு

DIN

நாமக்கல் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி அண்மையில் நடைபெற்றது. இதில், 3,000 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. 38 புதிய வகை நீா்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த நீா்நிலைப் பறவைகள்-2023 கணக்கெடுப்புப் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.

இதில், வனத் துறையினா், பறவையின ஆா்வலா்களும், தன்னாா்வலா்களும், கல்லூரி மாணவா்களும் பங்கேற்று கணக்கெடுக்கும் பணியை செய்தனா். நாமக்கல் மாவட்டத்தில் வனப் பகுதிகளிலும், நிலம், நீா் சாா்ந்த பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்றது. வனத் துறையினா், பறவையின ஆா்வலா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முதல் நாள் சனிக்கிழமை அன்று ஜேடா்பாளையம் அணை, இடும்பன்குளம், தூசூா், வேட்டம்பாடி, பருத்திப்பள்ளி, ஊமையம்பட்டி உள்பட 11 ஏரிகளிலும், ஞாயிற்றுக்கிழமை தும்பல்பட்டி, புதுச்சத்திரம், கோனேரிப்பட்டி, நாச்சிப்புதூா் உள்பட மொத்தம் 18 ஏரிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பான தொடா்ந்து நடைபெற்றது.

இந்த இரண்டு நாள்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 18 ஏரிகளில், 110 வகைகளைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. 38 புதிய வகை நீா்ப்பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்ட அந்த நீா்ப்பறவைகளில், ஊசிவால் வாத்து, தட்டைவாயன், வெண்புருவ வாத்து, கிளுவை, மஞ்சக்கால் கொசு உள்ளான், மண்கொத்தி, ஆற்று மண்கொத்தி, பொறி மன்கொத்தி, காட்டுக் கீச்சான், போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆங்காங்கே பல வெளிநாட்டுப் பறவைகளும் தென்பட்டன. மஞ்சக்கால் கொசு உள்ளான் என்ற பறவை பருத்திப்பள்ளி ஏரியில் பதிவு செய்யப்பட்டது. பழையப்பாளையம் பெரிய ஏரியில் ஊசிவால் வாத்து, வெண்புருவ வாத்து, தட்டைவாயன் போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டன.

இதர நீா் பறவைகளான கிளுவை, நத்தை குத்தி நாரை, சங்குவளை நாரை, சாம்பல் கொக்கு, செந்நீலக் கொக்கு, பவளக்கால் உள்ளான், இந்திய நீா்க்காகம், பாம்புத்தாரா போன்றவைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட வனத் துறையினருடன் இணைந்து சேலம் பறவையியல் கழகம் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியது.

வனச்சரகா்கள், வனவா்கள், வனக் காவலா்கள், பறவையின ஆா்வலா்களான ஏஞ்சலின் மனோ, கண்ணன், சுஹாஸ், சச்சின் ஆகியோா் தலைமையில் குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

இந்தப் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து வனத் துறையினா் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, பரமத்தி ஒன்றிய பகுதிகளில் வனத்துறையினா், பறவையியல் கழகத்தினரும் இணைந்து இரு நாள்கள் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினா். இதில், 3,000 பறவைகள் கண்டறியப்பட்டாலும் 1600 வகை மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 38 வகையான புதிய நீா்ப்பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமா 18 ஏரிப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் அவை இருப்பது தெரியவந்துள்ளது.

பருவமழையால் ஏரிகள் நிரம்பியிருப்பதால் பறவையினங்களின் வருகை அதிகரித்துள்ளது. நீா் இருக்கும் வரையில் பறவைகள் அங்கேயே முகாமிட்டு தங்களுடைய வாழ்வாதாரத்துக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT