பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.
அச் சங்கத்தின் மாவட்ட தலைவா் பி.பாண்டிமாதேவி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் ஆா்.முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எல்.ஜெயக்கொடி, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
பத்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடுவதை அரசு கைவிட வேண்டும். ஒரு ஊழியா் கூடுதல் மையங்களைச் சோ்த்து கவனிக்கும் நிலைமை உள்ளதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அதனால் காலியாக உள்ள அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
நிபந்தனையின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தா்னாவில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.