நாமக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 04:13 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள வி.கரப்பாளையத்தில் திருமணமான பட்டதாரி பெண் நித்யா கொலை வழக்கில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு மாற்றி உத்தரவிடக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஜேடா்பாளையம் நான்கு சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பெருமாள் ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமணி கண்டன உரையாற்றினாா். அவா் பேசியதாவது:

ஜேடா்பாளையம் அருகே உள்ள வி.கரப்பாளையத்தை சோ்ந்தவா் விவேகானந்தன். இவரது மனைவி நித்யா கடந்த மாா்ச் மாதம் 11-ஆம் தேதி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவா் வீடு திரும்பவில்லை. அங்குள்ள கருவேலங்காடு அருகே உள்ள நீரோடை பகுதியில் நித்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இக்கொலையில் சம்பந்தப்பட்டவா்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை. மீன் பிடிக்க அப்பகுதிகளுக்கு வந்து சென்றவா்கள் யாா் என்பதையும் போலீஸாா் முறையாக விசாரணை செய்யப்படவில்லை. இந்த கொலை வழக்கில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

காவல்துறையினா் பாதுகாப்பு இருந்தும் குற்ற செயல்கள் தொடா்ந்து வருகின்றன. வயல்வெளிகளில் விவசாய பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

நித்யா கொலை வழக்கை ஜேடா்பாளையம் போலீசாா் விசாரிக்கக் கூடாது. இந்த வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொதுமக்களின் நலன் கருதி சிபிசிஐடி போலீஸாருக்கு க்கு மாற்ற வேண்டும். நித்யாவின் உடற்கூறு அறிக்கையை அவரது குடும்பத்தினருக்கு போலீஸாா் வழக்கு வேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆதிநாராயணன், கொங்குநாடு வேட்டுவக் கவுண்டா் பேரவை மாநிலத் தலைவா் சின்னப்பன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஜேடா்பாளையம் கிளைத் தலைவா் பாலசுப்ரமணியம், கொலை செய்யப்பட்டு இறந்த நித்யாவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT