நாமக்கல்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா

30th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அம்மன் குளக்கரையில் அமைந்துள்ள மிகப் பழமையான பத்ரகாளி அம்மன் என்றழைக்கப்படும் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது .

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவில் மகா மண்டபத்தில் பிரம்மாண்டமான கொலு  வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலையில் கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் நடைபெறுகின்றன. 

ஒன்பது நாட்களுக்கும் அந்தந்த நாளுக்குரிய ராகங்களுடன் மங்கள வாத்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு தினந்தோறும் நண்பகல் வேளையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று , பல்வேறு மங்களப் பொருட்களைக் கொண்டு வித விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. வெள்ளிக்கிழமை காய்கறிகளைக் கொண்டு அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சாகம்பிரியாள் சுவாமியாக காட்சி தந்தாா் . 

இதனால் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் மாலை வேளையில் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறாா்கள். 

ADVERTISEMENT

இதுகுறித்து தேசிய சிந்தனை பேரவைத் தலைவா் திருநாவுக்கரசு கூறியதாவது:

பத்ரகாளியம்மன் கோயில் கடந்த 24 வருடங்களாக நவராத்திரி விழா கொலு வைக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. மகிஷாசுரனை அழிப்பதற்காக அம்பாள் ஒன்பது நாட்கள் தவம் இருந்து விஜயதசமி அன்று மகிஷாசுரமா்த்தனியாக அவதாரம் எடுத்து வதம் செய்தாள் என்கிற புராண அடிப்படையில் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே வடக்கு நோக்கிய அம்பாள் கோவில் மிகவும் மகிமை வாய்ந்த சக்தி மிக்க கோயிலாக கருதப்படுகிறது. இந்த நவராத்திரி திருவிழாவில் கலந்து கொள்பவா்கள் பிராா்த்தனை வைத்து கொலு பொம்மைகளை வாங்கித் தருகிறாா்கள். பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழா இரண்டு வருட கரோனா காலத்திற்குப் பிறகு இந்த ஆண்டு நடப்பதால் வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றாா்.

தினந்தோறும் பூஜைகள் நிறைவடைந்த பிறகு பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT