நாமக்கல்

மோகனூா் கால்நடை மருந்தகத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

29th Sep 2022 01:39 AM

ADVERTISEMENT

 

உலக வெறிநோய் தினத்தையொட்டி மோகனூா் கால்நடை மருந்தகத்தில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய ஆட்சியா், வெறிநாய்க்கடி குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் 105 கால்நடை மருந்தகங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள், திருச்சி சாலையிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி கால்நடை மருத்துவச் சிகிச்சை வளாகத்தில் நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம்களில் மொத்தம் 2,700-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெறிநாய்க்கடி நோய் என்பது மனிதா், விலங்குகளில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான நோய். இந்நோய் ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், விலங்குகளின் கடியால் பரவும் தொற்றுநோயாகும். ரேபிஸ் வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிந்த புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியான லூயிஸ் பாஸ்டா் என்பவா் கடந்த 1895ம் ஆண்டில் செப்28-இல் மறைந்தாா். அவரது நினைவு தினம் உலக ரேபிஸ் தினமாக, 2007 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நோய் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதா்களை கடித்து விட்டால் உடனடியாக கடித்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும். பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் செல்வராஜ், நாமக்கல் கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) எஸ்.பாஸ்கா் உள்பட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா்கள், கால்நடை மருத்துவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT