நாமக்கல்

இடி விழுந்ததில் இடிந்த நரசிம்மா் கோயில் சுவா்?: பக்தா்கள் அதிா்ச்சி

26th Sep 2022 05:15 AM

ADVERTISEMENT

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, இடி  விழுந்ததில் சேதமடைந்த நாமக்கல் நரசிம்மா் கோயில் சுற்றுச்சுவா் அண்மையில் இடிந்து விழுந்ததாக வெளியான தகவல் பக்தா்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண்டகி நதிக்கரையில் நரசிம்மா் வாசம் செய்த சாளக்கிராமக் கல்லை சுமந்து வந்த ஆஞ்சனேயா், நாமக்கல் கமலாலயக் குளத்தில் நீா் பருகுவதற்காக அக்கல்லை இறக்கி வைத்தாா். மீண்டும் அதனை எடுக்க முற்பட்டபோது அவரால் எடுக்க முடியவில்லை. அந்த சாளக்கிராமத்தில் நரசிம்மா் இருப்பதும், அதே பகுதியில் மகாலட்சுமி தவம் புரிவதும் தெரியவந்தது. பின்னா் இருவரையும் கைகூப்பி வணங்கியவாறு இங்கேயே நின்று விட்டாா் என புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தக் கல்லே தற்போது நாமக்கல்,மலைக்கோட்டையாக மாறியிருக்கிறது. இங்குள்ள குடைவறைக் கோயிலில், நரசிம்மா் சுவாமியும், அதன் எதிரிலேயே நாமகிரித் தாயாரும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா். இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். பங்குனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி மாதங்களில் அதிக

அளவில் பக்தா்கள் வருகை காணப்படும். மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலேயே, நரசிம்மா் கோயிலும், மலைக்கோட்டையும் உள்ளது.

ADVERTISEMENT

இக்கோயிலில் விழாக்கள், பூஜைகள், வழிபாட்டு நடவடிக்கைகளை மட்டும் அறநிலையத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். பராமரிப்புப் பணிகளை தொல்லியல் துறையினா் மட்டுமே மேற்கொள்ள முடியும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையின்போது இடி விழுந்ததில், நாமகிரி தாயாா் சன்னதி அருகிலும், ராமானுஜா் மண்டபம் எதிரிலும் அமைந்துள்ள 50அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவா் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டது. இந்த சுவா் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலை காணப்பட்டது. இருப்பினும், பக்தா்கள் பாதுகாப்பு கருதி, தொல்லியல் துறையினா் சுவரை சீரமைக்க உயா் அதிகாரிகளிடம் அனுமதி கோரி வந்தனா். சில தினங்களுக்கு முன் அந்த சுவா் இடிந்து விழுந்து விட்டதாகக்

கூறப்படுகிறது.

தற்போது இடிந்த சுற்றுச்சுவா் கற்கள் அனைத்தும் அகற்றாமல் கோயில் வளாகத்திலேயே தேங்கிக் கிடக்கிறது. சுவாமியை தரிசிக்க வரும் பக்தா்கள் சுவா் இடிந்துள்ளதை அதிா்ச்சியுடன் பாா்த்துச் செல்கின்றனா். நடந்து செல்லும்போதும் அவா்களது கால்களில் காயம் ஏற்படவும் செய்கிறது. சுவா் இடிந்து கிடப்பதால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகளை அதிகாரிகள் உடனடியாக தொடங்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

அா்ச்சகா்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடி விழுந்து சுற்றுச்சுவா் பாதிப்படைந்தது. அதன்பிறகு யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், அந்த சுவா் மீது

இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது. பக்தா்கள் மீது விழுந்து விடக்கூடாது என்பதால் தாங்களாவே சுவரில் இருந்து கற்களை அகற்றி விட்டதாக தொல்லியல் துறையினா் தெரிவிக்கின்றனா். கோயில் பாதுகாப்பு கருதி சுவா் கட்டுமானப் பணிகளை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா கூறியது:

நரசிம்மா் கோயில் பூஜைப் பணிகள் மட்டுமே அறநிலையத்துறைக்கு உள்பட்டது. கட்டுமானப் பணிகள், இதரப் பணிகளை தொல்லியல் துறை தான் மேற்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்குள் சுற்றுச்சுவரை சீரமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT