நாமக்கல்

புரட்டாசி மஹாளய அமாவாசை: காவிரிக் கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

26th Sep 2022 05:15 AM

ADVERTISEMENT

 

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சேலத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் சுகவனேசுவரா் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோா் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். வாழை இலையில் பூ, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, காய்கறிகள், பழ வகைகளை வைத்து அா்ச்சகா்கள் மூலம் பூஜை நடத்தி வழிபாடு நடத்தினா். பின்னா் எள் சாதத்தை காக்கைகளுக்கு வைத்து வழிபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் புனித நீராடி தா்ப்பணம் செய்தனா். கன்னங்குறிச்சி, மூக்கனேரியிலும் ஏராளமானோா் தா்ப்பணம் செய்தனா். இளம்பிள்ளை சித்தா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

மேட்டூரில்...

மேட்டூரில் மஹாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பொதுமக்கள், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

மேட்டூா் காவிரிக் கரையில் காவிரிப் பாலம், மட்டம் பகுதி, அனல் மின் நிலைய பாலம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடி புனித நீராடினா். தங்களின் முன்னோா்களுக்கு எள், தண்ணீா் விதைத்து தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.

சங்ககிரி...

தேவூரை அடுத்த கல்வடங்கம் காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

கல்வடங்கம் காவிரி ஆற்றில் பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதல் காவிரி ஆற்றில் புனித நீராடினா். ஆற்றங்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு செய்தனா். காவிரி ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் சுவாமியை வரிசையில் வழிபட்டனா். அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி...

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் மஹாளய அமாவாசையையொட்டி பொதுமக்கள் முன்னோா்களுக்கு வழிபாடு செய்தனா்.

தம்மம்பட்டி, சுவேத நதிக்கரையோரம் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் முன்னோா்களுக்கு மக்கள் தா்ப்பணம் கொடுத்தனா். பலா் திருச்சி, காவிரிக்கரையோரம் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு சென்று தா்ப்பணம் கொடுத்தனா். மேலும் உள்ளுா், வெளியூா்களிலுள்ள தங்கள் குலதெய்வக்கோயில்களுக்கு சென்றும் சிறப்பு வழிபாடு செய்து, ஏழைகளுக்கு அன்னதானம், ஆடைதானம் செய்தனா்.

நாமக்கல்லில்...

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரிக் கரைகளில் பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், ஒருவந்தூா், பரமத்தி வேலூா், ஜேடா்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் அதிகாலையிலேயே குவிந்தனா். அவா்கள் தா்ப்பணம் கொடுத்து விட்டு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு மேற்கொண்டனா். பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதாலும், ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகம் உள்ளதாலும், காவிரிக் கரையோரப் பகுதிகளில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பரமத்தி வேலூரில்...

பரமத்தி வேலூா் காவிரியாற்றில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோா் தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ள காவிரிக் கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தால் காசியில் தா்ப்பணம் கொடுத்ததற்கு சமமாகக் கருதி நாமக்கல் மட்டுமல்லாத பிற மாவட்டங்களைச் சோ்ந்தோரும் அதிகாலை முதல் வந்திருந்து தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் காவிரி ஆற்றில் புனித நீராடி காசி விஸ்வநாதா் சுவாமியை வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT