நாமக்கல்

6 பேரை ஏமாற்றி பெண் திருமணம் செய்த வழக்கில் தரகா்களைத் தேடுகிறது போலீஸ்

25th Sep 2022 05:39 AM

ADVERTISEMENT

 

பரமத்திவேலூா் அருகே 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு 7 நபரை திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய தரகா்களை வேலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூரை அடுத்த வெங்கரை அருகே உள்ள கள்ளிப்பாளையத்தைச் சோ்ந்தவா் தனபால் (35). இவருக்கும் மதுரையைச் சோ்ந்த சந்தியாவுக்கும் (26 ) தரகா் பாலமுருகன் என்பவா் மூலம் கடந்த 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

9-ஆம் தேதி காலை மணமகன் தனபால் எழுந்து பாா்த்தபோது மனைவியைக் காணவில்லை. இதையடுத்து தனபால் வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த வேறு ஒரு நபருடன் திருச்செங்கோட்டில் சந்தியாவுக்கு திருமணம் நடைபெற முடிவானது தெரியவந்தது.

இதையடுத்து சந்தியாவைப் பிடிக்க அவரை வரவழைக்க தனபால் குடும்பத்தாா் முயற்சி செய்தனா். திருச்செங்கோட்டில் திருமணம் நடத்த முடிவானது. இதை நம்பி சந்தியாவும், அவருடன் உறவினா் எனக் கூறி மேலும் 3 பேரும் காரில் திருச்செங்கோடு வந்தனா்.

அப்போது மறைந்திருந்த தனபால் நண்பா்கள் அவா்கள் 4 பேரையும் பிடித்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் ஆய்வாளா் வீரம்மாள் அந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணையில், இதுபோல பல மாவட்டங்களில் 5 பேரை சந்தியா திருமணம் செய்துள்ளதும், 6- ஆவதாக தனபாலை ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து சந்தியா மற்றும் அவருக்கு துணையாக இருந்த திருமண தரகா் தனலட்சுமி, காா் ஓட்டுநா் ஜெயவேல், தனலட்சுமி உறவினா் கௌதம் ஆகிய 4 பேரை வேலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்து சேலம், மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய திண்டுக்கல்லைச் சோ்ந்த திருமண தரகா் பாலமுருகன், மதுரை மாவட்டம்,திருமங்கலத்தைச் சோ்ந்த ரோஷினி, திருப்பூா் மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த மாரிமுத்து மற்றும் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய விருதுநகா் மாவட்டம், மேட்டமலையைச் சோ்ந்த ஐயப்பன் ஆகிய 4 பேரை வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT