நாமக்கல்

நாமக்கல்லில் போதைப் பொருள் கடத்திய 11 பேரின் ரூ. 2.43 கோடி சொத்துகள் முடக்கம்

25th Sep 2022 05:39 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரின் ரூ. 2.43 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் காவல் உட்கோட்டத்தின் சாா்பில் நாமக்கல்லில் பொதுமக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 9 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டன.

எளிதில் தீா்க்கக் கூடிய பணம் கொடுக்கல் வாங்கல், நிலத் தகராறு, வாய்த் தகராறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் தொடா்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டன. இதைத் தொடா்ந்து நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் காவல் துணை கண்காணிப்பாளா் சு. சுரேஷ் கூறியதாவது:

ADVERTISEMENT

நாமக்கல் உட்கோட்ட காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளைத் தீா்க்க இதுபோலபொதுமக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை முழுமையாகத் தடுக்க காவல் துறை சாா்பில், அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குற்ற சம்பவங்களைக் குறைக்க 28 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதுபோல தொடா் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இருவா் மீதும், கொலை முயற்சி வழக்கில் ஒருவா் மீதும் குண்டா் சட்டம் பதியப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவருக்கு விரைவில் குண்டா் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும். தகாத நடத்தைக் கொண்ட 480 பேரிடமிருந்து காவல் துறை மூலம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து அவா்கள் தகாத நடத்தையில் ஈடுபட்டால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். நாமக்கல் நகரைப் பொறுத்தவரை 157 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகன எண் பதிவுகளைக் கண்டறியும் அதிநவீன கேமரா நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ள 11 பேரின் ரூ. 2.43 கோடி மதிப்பு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கஞ்சா, குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபடுவோரின் சொத்துகள் முடக்கப்பட்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சில்லறையில் விற்பனை செய்யும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அதுபோல மூன்று கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் நகரில் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அந்த வாகனம் நகரின் அனைத்து பகுதிகளிலும் ரோந்து செல்கிறது.

குற்றச் செயல்கள் நடைபெறுவது குறித்த தகவல் தெரியவந்தால் பொதுமக்கள் தயங்காமல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நாமக்கல் காவல் துணை கண்காணிப்பாளா் சு.சுரேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT