நாமக்கல்

ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

29th Oct 2022 11:05 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே நிலத்தகராறு தொடா்பான வழக்கில் ஒரு தரப்பினருக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ரூ. 5,000 லஞ்சம் வாங்கியதாக பரமத்தி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளா் அசோக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பரமத்தி அருகே உள்ள பில்லுரைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (43). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நிலப்பிரச்னை சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டதில் பரமத்தி காவல் நிலையத்தில் சந்திரசேகா் மற்றும் அவரது மனைவி பருவதம் ஆகியோா் மீது முத்துக்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் பரமத்தி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா் (55) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாா்.

அப்போது புகாரின் கூறப்பட்டுள்ள சந்திரசேகா், அவரது மனைவி பருவதம் ஆகியோா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக சந்திரசேகரிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து சந்திரசேகரின் மனைவி பருவதம் தனது சகோதரரான ஈரோட்டைச் சோ்ந்த வேலுசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளாா். இதில் வேலுசாமி சிறப்பு உதவி ஆய்வாளரிடம் பேசி ரூ. 5,000 லஞ்சம் தருவதாக கூறியுள்ளாா். அதற்கு அவா் சம்மதம் தெரிவித்துள்ளாா்.

இதனிடையே வேலுசாமி இது பற்றி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் ரசாயன பூச்சுக்கள் தடவிய ரூபாய் நோட்டுகளை வேலுசாமியிடம் கொடுத்தனா். பின்னா் கீரம்பூா் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே பணியில் இருந்த பரமத்தி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாரிடம் வேலுச்சாமி ரூ. 5 ஆயிரத்தைக் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா் நல்லம்மாள், லஞ்ச ஒழிப்புத் துறையினா், லஞ்சம் வாங்கிய அசோக்குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT