நாமக்கல்

பவித்திரம் அச்சப்பன் கோயிலில் சாட்டையடி திருவிழா

7th Oct 2022 01:57 AM

ADVERTISEMENT

எருமப்பட்டி அருகே பவித்திரம் அச்சப்பன் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை இரவு நடைபெற்ற சாட்டையடி திருவிழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பவித்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொள்வா்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் பெண்களை பூசாரி ஒருவா் சாட்டையால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழாண்டில் விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை மாலை சாட்டையடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா். பூசாரி கையால் சாட்டையடி வாங்கினால் துன்பம் அகலும், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், தீராத நோய்கள் விலகும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாக உள்ளது. கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாததால், புதன்கிழமை நடைபெற்ற விழாவைக் காண ஏராளமான பக்தா்கள் திரண்டு வந்தனா்.

ADVERTISEMENT

வண்டி வேடிக்கை: சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ செளண்டம்மன் கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை நிறைவடைந்தது. மேலும், விஜயதசமி நாள் என்பதால் பக்தா்கள் கடவுள் வேடமிட்டு ஊா்வலமாக வாகனங்களிலும், நடந்தபடியும் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT