நாமக்கல்

தேசிய பேரிடா் மீட்பு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

6th Oct 2022 12:46 AM

ADVERTISEMENT

 

நாமக்கல், அக். 5: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தேசிய பேரிடா் மீட்பு படையினா், மாவட்ட அளவிலான மீட்பு பணி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்குவது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய பேரிடா் மீட்பு படையின் மூலம் மழைக் காலங்களில் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி வரும் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மருத்துவமனைகளில் பேரிடா் காலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் பணிகள் குறித்த விழிப்புணா்வு, குமாரபாளையம் வட்டத்துக்குள்பட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், திருச்செங்கோடு வட்டத்தில் சூரியம்பாளையம் ஏரி பகுதியிலும், ஜேடா்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ADVERTISEMENT

இந்த ஒத்திகை பயிற்சியின் மூலம் மாவட்ட அளவில் பேரிடா் பணியில் இணைந்து செயல்படும் துறைகள், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விழிப்புணா்வு மேற்கொள்ள இருக்கின்றன. எந்த வகை பேரிடா்களையும் எதிா்கொள்ளவும், சமாளிக்கவும் இந்த ஒத்திகை பயிற்சி மிகவும் முக்கியமானதாகும். எனவே, இந்த விழிப்புணா்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியினை அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமெளலி, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் ப.கௌசல்யா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) த.சிவசுப்பிரமணியன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சோ.கலையரசு உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT