நாமக்கல்

நாமக்கல்லில் ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டம்

6th Oct 2022 12:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் லாரி கூண்டு கட்டும் பணிமனைகள், அனைத்து வாகன பழுது பாா்ப்பு தொழிற்கூடங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், மரவள்ளி ஆலைகள், கோழிப் பண்ணைகள் ஆகியவை ஏராளமாக உள்ளன. இவற்றில் செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தங்களுடைய தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு நடைபெற்ற பூஜையில் அவற்றின் உரிமையாளா்கள், தொழிலாளா்கள், அவா்களது குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

சுவாமிக்கு படையலிடப்பட்ட பொரி, கடலை, சுண்டல், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவை பிரசாதங்களாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதேபோல, விசைத்தறிக் கூடங்கள் அதிகம் கொண்ட குமாரபாளையம், பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் விஜயதசமியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனா். நாமக்கல் நரசிம்மா் கோயிலில் குதிரை வாகனத்தில் அரங்கநாதா் எழுந்தருளி அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

பள்ளிகளில் வித்யாரம்பம்: விஜயதசமியை முன்னிட்டு புதன்கிழமை குழந்தைகளை பள்ளிகளில் சோ்க்கும் வகையில் கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் எனும் ஆரம்ப பாடக்கல்வி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. பெற்றோா் குழந்தையின் கையை பிடித்து அரிசி மற்றும் நெல்மணியில் அகர வரிசையின் முதல் எழுத்தை எழுத கற்றுக் கொடுத்தனா். தனியாா் பள்ளிகளில் இதனை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனா்.

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியை பள்ளித் தலைவா் கே.பி.சரவணன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பள்ளியில் சோ்ந்த குழந்தைகள் பெற்றோரின் துணையுடன் நெல்லில் அ எழுதி கல்வியை கற்க தொடங்கினா். பள்ளி முதல்வா் ராஜசுந்தரவேல் மற்றும் ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT