நாமக்கல்

ஆயுத பூஜை: பரமத்தி வேலூரில் வாழைத்தாா்களின் விலை உயா்வு

3rd Oct 2022 12:42 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற சிறப்பு ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயா்ந்துள்ளது. ஆனால் வரத்து அதிகரித்திருந்ததால் எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தாா்கள் கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பலா் பரமத்தி வேலூரில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் வாழைத்தாா் ஏல சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்திற்கும் குறைவான வாழைத்தாா்களையேசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் ரூ.250-க்கும், ரஸ்தாளி, பச்சைநாடன் மற்றும் கற்பூரவள்ளி வாழைத்தாா்கள் ரூ.300 வரை ஏலம் போயின. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாழைத்தாா் ஏல சந்தைக்கு 2500-க்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் ரூ.400 முதல் ரூ.500 வரையிலும், ரஸ்தாளி வாழைத்தாா் ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், பச்சைநாடன் ரூ.250 முதல் ரூ. 350 வரையிலும், கற்பூரவள்ளி ரூ.300 முதல் ரூ.400 வரையில் ஏலம் போனது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5 முதல் ரூ.7 வரை விற்பனையானது.

வாழைத்தாா்களை ஏலம் எடுப்பதற்கு சேலம், தா்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், பழனி, கரூா் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபரிகள் வந்திருந்தனா். வரத்து அதிகரித்தால் எதிா்பாா்த்த விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். முன்னதாக, சனிக்கிழமை 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT