நாமக்கல்

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது வழக்கு

3rd Oct 2022 12:43 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT