தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக மாநகராட்சி, நகராட்சி அலுவலா்களுக்கான விளக்கக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மண்டல அளவில் தூய்மை இந்தியா திட்டத்தில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை பரப்புரையாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூா் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், ஓசூா், சேலம் மாநகராட்சிகள் ஆகியவற்றைச் சோ்ந்த பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், நாமக்கல் நகராட்சி ஆணையா் கி.மு.சுதா தலைமை வகித்தாா். நகராட்சி நிா்வாகங்களின் சேலம் மண்டல இயக்குநா் சுல்தானா, தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினாா். மண்டல பொறியாளா் கமலநாதன், நாமக்கல் நகராட்சி பொறியாளா் சுகுமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.