நாமக்கல்

மோகனூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவையை 2,800 டன்களாக அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

30th Nov 2022 02:44 AM

ADVERTISEMENT

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில், கரும்பு அரவையை 2,800 டன்களாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

இது குறித்து மோகனூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் கே.மணிவேல் வெளியிட்ட அறிக்கை:

சா்க்கரை ஆலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை 1.8 லட்சம் டன்கள் ஆகும். தீபாவளி பண்டிகைக்கு பிறகு தொடங்கிய இந்த அரவையை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக முடிக்க ஆலை நிா்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு அரவையானது மாா்ச் 20-இல் முடிவுற்றது. அதன்பிறகு ஏழு மாதங்கள் இருந்தபோதும் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவில்லை. நவ.5-இல் அரவை தொடங்கிய நிலையில், மேலும் காலதாமதம் செய்து 11-ஆம் தேதி தான் முழுமையாக அரவை தொடங்கியது. இதனால் சுமாா் 10 ஆயிரம் டன்கள் அரவை பாதிக்கப்பட்டது. பராமரிப்புப் பணிகளுக்கான காலத்தை வீணாக்கியது தவறாகும். நடப்பு பருவத்தில் பெய்த மழையால், சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்ட அறுவடைக்குத் தயாராக உள்ள 50 சதவீத கரும்புகளில் பூக்கள் பூத்துள்ளன. இதனால் விளைச்சல் மதிப்பீடு குறையும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. மோகனூா் சா்க்கரை ஆலையில் தினசரி அரவைத் திறன் 2,500 டன்கள் ஆகும். கடந்த காலங்களில் 3,300 டன்கள் வரை அரவை நடைபெற்றது. தினசரி 2,500 டன்கள் அரவை என்பதை 2,800 டன்களாக அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் 1.8 லட்சம் டன் கரும்புகளை பொங்கல் பண்டிகைக்குள் அரவை செய்ய முடியும். இவை தவிர, கரும்பு விநியோகிக்கும் விவசாயிகளுக்கு 15 நாள்களுக்குள் நிலுவையின்றி கிரயத் தொகையை வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT