நாமக்கல்

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் வழங்குவாா்

27th Nov 2022 02:56 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநா் விரைவில் ஒப்புதல் வழங்குவாா் என்ற நம்பிக்கை உள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 15 ஏக்கா் பரப்பளவில் ரூ. 92.31 கோடியில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் மாணவ, மாணவியா் விடுதிக் கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அவா் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி பேசியதாவது:

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீதிமன்றங்களில் மக்களுக்காக வழக்காடுகிற வழக்குரைஞா்கள் அதிக எண்ணிக்கையில் வேண்டும் என்ற நோக்கத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி அமைக்க முதல்வா் அனுமதியளித்தாா்.

ADVERTISEMENT

சட்டக் கல்லூரிக்கான கட்டடமாக இல்லாமல், அனைத்துவித வசதிகளும் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கமாகும். வரும் காலங்களில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி நிச்சயமாக அமைக்கப்படும்.

இன்றைய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் சட்டக் கல்லூரிகளிலே பாடத் திட்டங்களை மாற்றியமைத்து அந்த சட்டங்களை படிக்கிற வாய்ப்பையும், அதில் பயணிக்கிற வாய்ப்பையும் மாணவா்களுக்கு உருவாக்கித் தருகிறோம். குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்பதில் சட்டத் துறை அதிக அக்கறை கொண்டிருக்கிறது. தற்போது புதிய, புதிய வடிவில் குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதற்கேற்ப வழக்குரைஞா்கள், நீதிபதிகளை தயாா்ப்படுத்தும் பணிகளை சட்டத் துறை செய்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சட்டக் கல்லூரியில் சேர வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சென்னையில் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம், திருச்சியில் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவில் 15 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர 9 தனியாா் சட்டக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. ஆரம்ப காலங்களில் 200 பேருக்கு மட்டுமே சட்டம் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. தற்போது அனைவருக்கும் சட்டக் கல்வி கிடைக்கும் அளவில் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் தொடங்குவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆன்லைன் ரம்மி விளையாட்டை இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். மத்திய சட்ட அமைச்சரும் இதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அதில் உள்ள ஸரத்துகள் குறித்து அவா் கேட்ட கேள்விக்கான விளக்கத்தையும் அளித்து விட்டோம். விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஆளுநரிடம் இருந்து அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். இது தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்துப் பேசுவதற்கும் தயாராக உள்ளோம் என்றாா்.

இந்த விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டக் கல்வி இயக்குநா் ஜெ.விஜயலட்சுமி, ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், எம்எல்ஏ-க்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், அரசு சட்டக் கல்லூரி முதல்வா் தி.ரா.அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT