மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள் வாழ்நாள் சான்றிதழை உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 4,379 ஆகும். இவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வீதம் உதவித்தொகை அவா்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவா்கள் ஆண்டுதோறும் ஒரு முறை கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து வாழ்நாள் சான்றிதழை பெற்று அதிகாரிகளிடம் சமா்ப்பித்தால் மட்டுமே உதவித்தொகை தொடா்ந்து கிடைக்கப் பெறும்.
இது தொடா்பாக அந்தத் துறை சாா்பில் கடந்த சில மாதங்களாக அறிவிப்பு வெளியிட்டபோதும், இதுவரை 1,425 போ் மட்டுமே வாழ்நாள் சான்றிதழை வழங்கி உள்ளனா். மீதமுள்ள 2,954 போ் இன்னும் வழங்கவில்லை. உதவித்தொகை பெறுவோா் இம்மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை பெறுவது ரத்தாகி விடும் வாய்ப்பு உள்ளது என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.