நாமக்கல்

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம்

26th Nov 2022 03:04 AM

ADVERTISEMENT

வெண்ணந்தூா் வட்டாரத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுவதால், விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என வட்டார தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் மஞ்சுளா வெளியிட்டுள்ள அறிக்கை:

வெண்ணந்தூா் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெண்ணந்தூா் வட்டாரத்தில் இத்திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. ஆகவே, சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்களது நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், நிலவரைபடம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சிறு, குறு விவசாயி சான்றிதழ், 2 பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கா் பரப்பிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஏக்கா் பரப்பிலும் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டு துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் கீழ்கண்ட இனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

மின் மோட்டாா் அல்லது டீசல் என்ஜின் அமைக்க ரூ. 15 ஆயிரம், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீா் கொண்டு வரும் குழாய்கள் அமைக்க ரூ. 10 ஆயிரம், நீா் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க ரூ. 40 ஆயிரம் மானியமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள், தங்களது நிலங்களில் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் அமைத்த பிறகு இத்திட்டத்துக்கான மானியத்தை பெறலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT