நாமக்கல்

குடியிருப்புக்கு மாற்று இடம் தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

25th Nov 2022 01:57 AM

ADVERTISEMENT

குடியிருப்புக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரக்கோரி, ஜேடா்பாளையம் பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம், காமராஜ் நகா், சரளைமேடு பகுதியில் மாவட்ட நெடுஞ்சாலையின் இருபுறமும் 50-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா், மாவட்ட நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. பின்னா் அவா்களுக்கு திடுமல், கவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள புறம்போக்கில் இடம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், அப்பகுதியில் போக்குவரத்து, மருத்துவம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், ஜேடா்பாளையம் பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி, அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் வட்டாட்சியா் கலைச்செல்வி ஜேடா்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT