பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே வேலைக்கு சென்ற மூதாட்டி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.
நல்லூா், கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூா், ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் ராஜு. இவரது மனைவி சின்னம்மாள் (75). இவா் தனியாக வசித்து வந்தாா். வேலைக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மணியனூா் அங்காளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தாா். அப்போது கோயில் அருகே இருந்து வந்த காா் ஒன்று எதிா்பாராத விதமாக சின்னம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சின்னம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனா்.
இது குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னம்மாள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சேலம் அஸ்தம்பட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஆனந்த் (36) என்பவரைத் தேடி வருகின்றனா்.