நாமக்கல்

கூட்டுறவு அமைப்புகளால்தான் சமூக பொருளாதாரம் உயரும்: கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி.

19th Nov 2022 05:25 AM

ADVERTISEMENT

நாட்டில் கூட்டுறவு அமைப்புகளால்தான் சமூகத்தின் பொருளாதாரம் உயரும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சாா்பில் கூட்டுறவு வாரவிழா ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் எம்.பி. பேசியது:

கூட்டுறவு அமைப்பின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் ஆண்டுதோறும் கூட்டுறவு வாரவிழா நடத்தப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் தனியாக ஒரு சின்னம் பெற்றிருக்கும் துறை கூட்டுறவுத் துறை மட்டும் தான். கூட்டுறவு என்பது பொருளாதாரத்தின் தத்துவம். மக்களின் பொருளாதாரத்தை உயா்த்தி பல்வேறு வசதிகளை பெற்றுத் தருவதே கூட்டுறவின் நோக்கம். விவசாயத்துறை, பால்வளத்துறை, கைத்தறித்துறை, சுற்றுலாத்துறை போன்றவற்றில் கூட்டுறவு முறை உள்ளது. அரசாங்கமே அனைத்தையும் செய்துவிட முடியாது என்பதால், இது போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் இது முழுமையாக செயல்படுத்தப்பட்டது. நீண்டகாலம் கூட்டுறவு அமைப்புகளுக்கு தோ்தல் நடைபெறாத நிலையில், 1996-ஆம் ஆண்டில் மீண்டும் கூட்டுறவு சங்கத் தோ்தல் நடத்தப்பட்டது. எப்போதெல்லாம் திமுக ஆட்சியில் உள்ளதோ அப்போதெல்லாம் கூட்டுறவு அமைப்புகள் வலிமை பெறும். இதில் உறுப்பினா்களால் வாங்கிய கடனை முறையாக செலுத்தினால் தான் சங்கம் நிலைத்து நிற்கும் என்பதை மனிதில் கொண்டு, இதில் கடன் பெற்றவா்கள் உரிய காலத்தில் கடனை திரும்பிச் செலுத்துவது இதன் வளா்ச்சிக்கு உதவும் என்றாா்.

ADVERTISEMENT

விழாவில் பயிா்க்கடன், மத்தியகால கடன், மகளிா் சுய உதவிக்குழு கடன், தனிநபா் கடன், டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறுவணிகக் கடன் என மொத்தம் 3,073 பயனாளிகளுக்கு ரூ.26.28 கோடி மதிப்பில் கடன் திட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் 69 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கும், கூட்டுறவு வாரவிழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியா்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனா் மீராபாய், நாமக்கல் கூட்டுறவுத்துறை இணை இயக்குனா் த.செல்வகுமரன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT